×

கடலூரில் விதிகளை கடைபிடிக்காமல் மீன் வியாபாரம்: காவல்துறை எச்சரிக்கையை மீறி கூட்டம் கூடியதால் பரபரப்பு

கடலூர்: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மீன் வாங்க கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபரம் அதிகாலையில் கலைகட்டும் என்பதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனல், அவர்களது அறிவுறுத்தலை கொஞ்சமும் கேட்காமல் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை வாங்க கூடியதை காண முடிந்தது. தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,979 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 2412 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags : Cuddalore ,crowd , Cuddalore, Fish Trade, Police, Corona, Curfew
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...